28 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ உலாப்போந்த
அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி
கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
 
               - கருவூர்த் தேவர் (9-12-2)

 

பொருள்: உருகாத மனத்தினை உடைய அடியேனை மனம் உருகச்செய்வதற்காக, கோடை நகரத்துத் திரைலோக்கிய சுந்தரம் என்ற திருக்கோயிலில் உள்ள தலைவனே! நீ எம் தெருவழியே திருவுலாப் போந்த அன்றுமுதல் இன்றுவரையில் கைகள் நிறைவுறுமாறு தொழுது, அருவிபோலக் கண்ணீரை முழுமையாகப் பெருக்கினாலும் அடியேனுக்கு அருள்செய்ய மாட்டாயா?

25 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூவேறு கோனும்
புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும்
நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும்
வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
          - மாணிக்கவாசகர் (8-10-1)

 

பொருள்: அரசவண்டே! நீ, பிரமன், இந்திரன், சரசுவதி, திருமால், நான்கு வேதங்கள், முச்சுடர்கள், மற்றைத் தேவர்கள், ஆகிய எல்லாரும் அறியவொண்ணாத இடபவாகனனாகிய சிவபெருமானது திருவடியிற் போய் ஊதுவாயாக

24 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அண்ட கபாலஞ்சென்னி அடி
மேல்அலர் இட்டுநல்ல
தொண்டங் கடிபரவித் தொழு
தேத்திநின் றாடுமிடம்
வெண்டிங்கள் வெண்மழுவன் விரை
யார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம் பழ
மண்ணிப் படிக்கரையே.
 
             - சுந்தரர் (7-22-1)

 

பொருள்: திரண்ட தலையை அணிந்த முடியினையுடைய சிவபிரானது திருவடிகளில் நல்ல அடியார்கள் மலர்களை இட்டு அவ் வடிகளை வணங்கி , முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து ஆடுகின்றதும் , வெண்மையான பிறையை அணிந்தவனும் , வெள்ளிய மழுவை ஏந்தியவனும் , பகைவர்மேல் விரைதல் பொருந்திய , ஒளியை யுடைய மூவிலை வேலை உடைய , பண்டரங்கம்  என்னும் கூத்தினை உடையவனும் ஆகிய அப்பெருமான் விரும்பி எழுந் தருளியிருக்கின்றதும் இடம் ` திருப்பழமண்ணிப் படிக்கரை ஆகும் 

23 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முன்பெலா மிளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண விருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பக லுணங்க லட்டும் பேதைமார் போன்றே னுள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னீரே.
 
              - திருநாவுக்கரசர் (4-28-1)

 

பொருள்:  அடியேனுடைய இளமைக்காலமெல்லாம் உம் திருவடிவைத் தியானம் செய்யாமல் அலைந்து , மூப்பு நிலையில் கணீர் என்ற ஓசை உண்டாகுமாறு இருமிக் கருதற்பாலதாகிய சிவ சிந்தனையே இல்லாது , பயனுடைய செயல்கள் செய்யாமல் , உணவு வேளைக்கு உதவுமாறு முற்பகலில் சோறு வடிக்காமல் காலம் கடத்தி அகாலமான பிற்பகலில் உண்டற்கிதமில்லாதவற்றை உலையிலிட்டு சமைக்கவும் இல்லக் கிளத்தியர் போலாகின்றேன் . உளமார்ந்த மெய்யன்பினால் வாழ இயலாதவனாகின்றேன்  உள்ளத்திலே உமக்கு அன்பனாய் வாழமாட்டேனாய் ,
அதிகைவீ ரட்ட னீரே.

22 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே.
 
                 - திருஞானசம்பந்தர் (1-30-1)

 

பொருள்: மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என விதித்த விதியாகவும், அதன்காரணமாக வந்த மரணமாய், அவர் இறை வழிபாடு செய்ததன் காரணமாகத்தானே விதியின் பயனாய் வெளிப்பட்டுச் சினந்துவந்த கூற்றுவனை உதைத்தருளிய சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த பொழில்களும் சூழ்ந்த புகலிநகராகும்.

21 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

என்றவ ருரைத்த மாற்றம்
எறிபத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும்
நெருப்புயிர்த் தழன்று பொங்கி
மன்றவ ரடியார்க் கென்றும்
வழிப்பகை களிறே யன்றோ
கொன்றது வீழ்ப்ப னென்று
கொடுமழு எடுத்து வந்தார்.
 
         - எரிபத்தநயனார் புராணம் (20)

 

பொருள்: இவ்வாறு சிவகாமியாண்டார் முறையீடு செய்து கொண்டிருக்கும் சொற்களை அவர் எதிரில் வருகின்ற எறிபத்தர் கேட்டு, தன்னுள் மூளும் சினத்தீயோடு பெருமூச்சு விட்டு, மேலும் சினந்து, தில்லையில் கூத்தியற்றும் அடியவர்களுக்கு எந்நாளும் வழி வழியாகப் பகைமையாயுள்ளது யானையேயன்றோ? ஆதலால் அவ்யானையைக் கொன்று தரையில் வீழ்த்துவேன் என்று கொலை செய்தற்கு ஏது வாய கொடிய மழுப் படையை எடுத்துக் கொண்டு வந்தார்.

14 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூத்துக் கொலாமிவர் ஆடித்
திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது
மேனி பவளங்கொலாம்
ஏத்துக் கொலாமிவர் ஆதரிக்
கின்ற திமையவர்தம்
ஓத்துக் கொலாமிவர் கண்ட திண்
டைச்சடை உத்தமரே.
 
         - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-7)

 

பொருள்: இண்டை மாலையைச் சடையில் தரித்துள்ள மேலானவராகிய இவர், எங்கும் ஆடிச் செல்வது முறைப் படி அமைந்த நடனம்.
எங்கும் சென்று பிச்சை ஏற்பது தம் தேவியர் பகுத்து உண்டற்கு.
இவர் மேனி பவளம்போல்வது, இவர் எவரிடமும் விரும்புவது தம்மைப் புகழ்தலை. இவர் நினைவு மாத்திரத்தாற் செய்தது வேதம்

10 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.
 
              - திருமூலர் (10-4-12)

 

பொருள்:  உயிரினது வியாபகம் சிவனது வியாபகத்துள் அடங்கி நிற்கும் முறைமையையும், உயிர் அவனிடத்துச் செய்யும் அன்பாகிய நெகிழ்ச்சி அவனது பேரருளாகிய நெகிழ்ச்சியினுள் அடங்கிநிற்கும் முறைமையையும், உயிரினது அறி வாகிய சிற்றொளி, சிவனது அறிவாகிய பேரொளியில் அடங்கி நிற்கும் முறைமையையும்  தெளிபவரே சிவசித்தர் ஆவர் 

09 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
முகத்தலை யகத்தமர்ந் தினிய
பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன்
பனிமலர்த் திருவடி யிணைமேல்
ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர்
அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
சிவபதம் குறுகிநின் றாரே.
 
            - கருவூர்த்தேவர் (9-11-10)

 

பொருள்: எல்லாவற்றிக்கும்  ஆதியாய் அந்தமாய், முடிவு என்பதே இல்லாத முதற்பொருளாய்த் திருமுகத்தலை என்ற தலத்தில் அமர்ந்து, பாலும் அமுதமும் போன்ற இனிய னாய், பாம்பை அணிகலன்களாக உடையவனுடைய குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற திருவடிகள் இரண்டனையும் பற்றிக் கரும் பாலையில் காய்ச்சப்படும் பாகுபோன்ற சொற்களால் கருவூர்த்தேவர் பாடிய அமுதத்தை ஒத்த இனிய தமிழ்மாலையைக் கடமையாகக் கொண்டு பாடும் அடியவர் யாவரும் சிவலோக பதவியை மறு பிறப்பில் அணுகிநிற்பர்.

08 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயி னார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயி னாருக்
காதியும் அந்தமும் ஆயி னாருக்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
 
                - மாணிக்கவாசகர் (8-9-20)

 

பொருள்: வேதமும்  வேள்வியும்  ஆனவரும், மெய்ப்பொருளும் பொய்ப் பொருளும் ஆனவரும், ஒளியுமாகி, இருளும் ஆனவரும், துன்பமுமாகி இன்பமும் ஆனவ ரும், பாதியுமாகி முழுதுமானவரும், உயிர்களுக்குப் பந்தமும் ஆகி வீடும் ஆனவரும், உலகுக்கு முதலும் முடிவுமானவரும் ஆகிய இறைவருக்கு, நீராடும் பொருட்டுப் பொன்போலும் வாசனைப் பொடியை நாம் இடிப்போம்.

07 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாரூர் பல்லவனூர் மதிற்
காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும்புறவிற் றிரு
மேற்ற ளிச்சிவனை
ஆரூ ரன்னடியான் அடித்
தொண்டன்ஆ ரூரன்சொன்ன
சீரூர் பாடல்வல்லார் சிவ
லோகஞ் சேர்வாரே.
 
            - சுந்தரர் (7-21-10)

 

பொருள்: பல்லவனது அரசிருக்கை ஊராகிய , மதிலை உடைய காஞ்சி மாநகரின்கண் சிறப்புப் பொருந்திய இடத்தில் விளங்கும் திரு மேற்றளியின்கண் உள்ள சிவபெருமானை , திருவாரூர்ப் பெருமானுக்கு அடியவனான அணுக்கத் தொண்டனாம் நம்பியாரூரன் பாடிய ,  இப் பாடல்களைப் பாடவல்லவர் , சிவலோகத்தை சேர்வர்கள். 

04 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி யரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை யஞ்சப் பெருவிர லதனை யூன்றிச்
சீர்த்தமா முடிகள் பத்துஞ் சிதறுவித் தவனை யன்று
ஆர்த்தவா யலற வைத்தா ரதிகைவீ ரட்ட னாரே.
 
                 - திருநாவுக்கரசர் (4-27-9)

 

பொருள்: கயிலைமலையை நோக்கி வந்து போரிடும் வலிமையை உடைய இராவணன் அதனைப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்சத் தம் கால்விரலை அழுத்தி ஊன்றிச் சிறப்புடைய அவனுடைய தலைகள் பத்தும் சிதறச் செய்து , ஒரு கணத்தில் , மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்த அவன் வாய்கள் துயரத்தால் கதறுமாறு செய்தவராவர் அதிகை வீரட்டனார் ஆவார்  .

03 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மெய்த்து லாவு மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச் சரத்தை யுயர்காழி
அத்தன் பாத மணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே.
 
              - திருஞானசம்பந்தர் (1-29-11)

 

பொருள்: வாய்மையே பேசி வாழும் மறையவர் வாழும் திருநறையூரின்கண் சித்தன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமானது சித்தீச்சரத்தை, மேலான காழி மாநகரில் விளங்கும் சிவபிரானது திருப்பாதங்களைத் தனது திருமுடிக்கு அணியாகக் கொண்ட ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடிப்பரவப் பாவங்கள் நீங்கும்.

02 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வென்றிமால் யானை தன்னை
மேல்கொண்ட பாக ரோடும்
சென்றொரு தெருவின் முட்டிச்
சிவகாமி யார்முன் செல்ல
வன்தனித் தண்டில் தூங்கும்
மலர்கொள்பூங் கூடை தன்னைப்
பின்தொடர்ந் தோடிச் சென்று
பிடித்துடன் பறித்துச் சிந்த.
 
             - எறிபத்த நாயனார்  புராணம் (13)

 

பொருள்: வெற்றி பொருந்திய அப்பெரிய யானையானது தன் மீது இவர்ந்து வரும் பாகரோடும் சென்று, ஒரு தெருவில் அப்பாகர்களின் கட்டுக் கடங்காமல் தனக்கு முன் சென்று கொண்டிருக் கும் சிவகாமியாண்டாரைக் கண்ட அளவில், அவர்தம் வலிமை மிக்க ஒப்பற்ற தண்டில் தொங்குகின்ற மலர்கள் நிறைந்த திருப்பூங் கூடையை, அவர் பின் தொடர்ந்து ஓடிப் பற்றி, நிலத்தில் சிந்த.

01 July 2014

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

தவனே உலகுக்குத் தானே
முதல் தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ
லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி
கடலிடை நஞ்சம்உண்ட
பவனே எனச்சொல்லு வாரும்
பெறுவரிப் பாரிடமே.
 
               -  சேரமான் பெருமாள் நாயனார் (11-6-5)
 
 பொருள்: சிவபெருமானே எல்லோரிலும் முதல்வனும்,
எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும் அவன் படைத்தனவே.
 அவன் அனைத்துப் பொருள் களிலும் அவையேயாய் நிறைத்திருக்கின்றான்` என இவ்வாறு உணர்கின்றவர்கள் சிவலோக வாழ்க்கையைப் பெறுவர்.
 அவன் திருமாலை இடபமாகக் கொண்டு ஏறி நடாத்துபவன், பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தேவர் பொருட்டு உண்டவன், நினைப்பவர் நினைத்த இடத்தில் அவர் நினைத்த வடிவில் தோன்றுபவன் என இவ்வாறு அவனைப் புகழ்பவரும் இவ்வுலக ஆட்சியைப் பெறுவர்.