31 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்
வெருண்டமான் விழியார்க் கருள்செயா விடுமே
விடலையே எவர்க்குமெய் யன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்
கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.
 
                 - (9-7-10)

 

பொருள்: முருகப்பெருமானுக்கு உண்மையான அன்பர் களாகிய,  சான்றோர் கள் வாழும் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற, பூக்களைச் சூடிய சுருண்ட மயிரினையும் பிறையைச் சூடிய சடைமுடியையும் முக்கண்களையும் உடைய சிவபெருமானுடைய மென்மையான கொழுந்துபோன்ற மகனாகிய முருகன் விரும்பி உறைகின்ற திருக் கோயிலையும், வளம்நிறைந்த சிறந்த குன்றுகளிடத்தே வளர்கின்ற சோலைகளையும் உடையதாய், எல்லோரும் மகிழும்படியான திருப்பிடவூரில் உள்ள மருண்ட மானின் விழிபோன்று மருண்ட விழிகளைஉடைய இப்பெண்களுக்கு அருள்செய்யாமல் அவர் களைப் புறக்கணித்துவிடுவானோ?

30 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.
 
                - மாணிக்கவாசகர் (8-7-10)

 

பொருள்: கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இறைவன் திருவடிகள்  இருக்கும்; மலர்கள் நிறைந்து அவனது திருமுடியும், மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; அவன் ஒரேவகையானவன் அல்லன்; ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதலாக, விண்ணுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன். அத்தன்மையனாகிய சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?

29 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாலயனுங் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன்
வன்னிமதிசென்னிமிசைவைத்தவன்மொய்த்தெழுந்த
வேலைவிடம் உண்டமணி கண்டன்விடை ஊரும்
விமலன்உமை யவளோடு மேவியஊர் வினவில்
சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச்
சுரும்பொடுவண்டிசைமுரலப்பசுங்கிளிசொல்துதிக்கக்
காலையிலும் மாலையிலும் கடவுள்அடி பணிந்து
கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.
 
                  - சுந்தரர் (7-16-8)

 

பொருள்: மாலும் பிரமனும் அடிமுடி தேடி அறியாதபடி நெருப்புருவமாய்  நின்றவனும் , வன்னியும் , பிறையும் சடையிற் சூடியவனும் கடலிற் றோன்றிய விடத்தை உண்டு கறுத்த நீலமணி போலும் கண்டத்தை யுடையவனும் , இடபவாகனத்தை ஊர்பவனும் ஆகிய இறைவன் உமாதேவியோடு விரும்பியிருக்கின்ற ஊர் யாது ?  என்று வினவினால் , சோலைகளில் நிறைந்த குயில்கள் கூவவும் , அழகிய மயில்கள் ஆடவும் , சுரும்பும் வண்டும் இசை கூட்டவும் , பசிய கிளிகள் தாம் கேட்டவாறே சொல்லி இறைவனைத் துதிக்கும்படி , காலை , மாலை இரண்டு பொழுதிலும் இறைவனது திருவடிகளை வணங்கி , உருகிய மனத்தை உடைய அடியார்கள் மிக்கிருக்கின்ற திருக் கலயநல்லூரே ஆகும் 

28 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முடிகள்வணங்கி மூவாதார்கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்
பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ
அடிகளாரூ ராதிரைநாளா லதுவண்ணம்.
 
             - திருநாவுக்கரசர் (4-21-8)

 

பொருள்: தலையால்  தேவர்கள் வணங்கி முன்னே செல்லவும்,  மூங்கில்போன்ற தோள்களை உடைய தேவருலகப் பெண்கள் பின்னே செல்லவும் திருநீற்றைப் பூசிய அடியவர்கள் நாற்புறமும் சூழ்ந்து நிற்கவும் எம்பெருமான் ஆரூரில் திருவாதிரைத் திருவிழாவில் காணப்படும் அழகு என்றும் உள்ளத்து நிலை பெறுவதாகும்.

25 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீள்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.
 
                 - திருஞானசம்பந்தர் (1-23-1)

 

பொருள்: மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப்பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ?

24 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரின் நீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக்
காரின் நீடிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை.
 
                       - அமர்நீதி நாயனார் புராணம் (1)

 

பொருள்: பெரும்  புகழுடைய சோழர்கள் அரசாளுதற்குரிய காவிரி பாயும் சோழநாட்டில், மேக மண்டலம் வரை ஓங்கிய களிப்பினை உடைய வண்டுகள் சூழும் மலர்களையுடைய சோலை களால் சூழப்பட்டு, தேரோடு பொருந்திய, செழுமையான மணிகள் இழைத்த வீதிகளால் சிறப்படைந்து, இவ்வுலகில் நிலைபெற்ற பெருமையினை உடைய நகரமாக விளங்குவது பழையாறை ஆகும்.
 

23 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன்
உருவடியில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.

               - காரைகாலம்மையார் (11-4-67)

பொருள்:  சிவபெருமான் பகைப் பொருள்களைத் (பாம்பு, மதி, மான், புலி )தனது மேனியில் பகைதீர்த்துப் பயில வைத்தமையாலும், தாங்கற்கரிய கங்கையைத் தலையில் தாங்கினமையாலும் - சிவன் திருவடியில் மேயது கழலேயாகையால் `கழல் வீரம் உடையார்க்கே உரியது என்பது இங்கு நன்று பொருந்தியுள்ளது. 

22 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசங் கடந்தெய்த லாமே.
 
               - திருமூலர் (10-1-45)

 

பொருள்: தன்னின் வேறாகாத சத்திக்கும், தன்னின் வேறாகிய பசு பாசங்கட்கும் தலைவனாகிய சிவபெருமானை நினைந்து, உயிர்க்குரிய உடலிடத்தே சொல்லும் அந்நெறிப்பட்டு நிற்க வல்லவர்கட்கு, கட்டுற்ற உயிர்கட்கு உரித்தாகிய அலைமோதும் பிறவிப் பெருங்கடலை நீந்தி, மும்மலங்களும் கழன்று, பரமுத்தி யாகிய கரையை அடையலாம்.

21 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
படுமிடர் குறிக்கொளா தழகோ
மணமணி மறையோர் வானவர் வையம்
உய்யமற் றடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
கணபதி பின்னிளங் கிளையே.
 
              - (9-7-5)

 

பொருள்: அந்தணர் களும் தேவர்களும் நில உலக உயிர்களும் தீங்கினின்றும் பிழைக்கு மாறும், அடியேனாகிய யானும் வாழுமாறும், அழகிய மாடிவீடுகளை உடைய திருவிடைக்கழியில் திருக்குரா நிழலின் கீழ்நின்ற, இரத்தினங்கள்  அடித்துக்கொண்டு வரும் நீர்ப்பெருக்கை உடைய கங்கா தேவியின் மகனும், கணபதியின் தம்பியும் ஆகிய முருகப்பெருமான், நற்குணங்கள் தன்னைச் சேர்ந்து அழகு பெறுதற்குக் காரணமான சிறுமியாய்க் கொவ்வைக்கனிபோன்ற சிவந்தவாயினை உடைய என் மகள், தன் அருள் முழுமையாகக் கிட்டாமையால் உறும் துயரத்தைத் தன்மனத்தில் ஏற்று அதற்குப் பரிகாரம் தேடாமல் இருப்பது, அவனுக்கு அழகிய செயல் ஆகுமா?

17 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.
 
               - மாணிக்கவாசகர் (8-7-9)

 

பொருள்: பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே! பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை பிரானாக  பெற்ற சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.

16 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் திறத்தே
கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்
கலைபயில்அந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.
 
                        - சுந்தரர் (7-16-5)

 

பொருள்: நின்ற கோலத் திருமாலும் , தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனும் முதல்வராகத் தேவர் பலரும் குறையுடையராய் நிறைந்து வந்து இரக்க , அவரது துன்பத்தைத் திருவுள்ளத்தடைத்து அவர் பொருட்டாக , மலையாகிய வில்லும் , பாம்பாகிய நாணியும் , தீயாகிய அம்பும் என்னும் இவற்றால் பகைவரது முப்புரங்களையும் எரித்தொழியச் செய்த , உலகியலுக்கு வேறுபட்டவனது ஊர் யாது ?` என்று வினவின் , சொல்பொருள் வகைகள் பல வற்றையும் உடைய வேதங்கள் நான்கையும் , தோத்திரங்கள் பல வற்றையும் சொல்லித் துதிக்குமாற்றால் இறைவனது நெறிக்கண் கற்பாரும் கேட்பாருமாய் நின்று , எவ்விடத்திலும் நன்மை யமைந்த நூல்களைப் பயில்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கலயநல்லூரே காண் .

15 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நிலவெண்சங்கும் பறையும்மார்ப்ப நிற்கில்லாப்
பலருமிட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்
கலவமஞ்ஞை காரென்றெண்ணிக் களித்துவந்
தலமராரூ ராதிரைநாளா லதுவண்ணம்.
 
          - திருநாவுக்கரசர் (4-21-5)

 

பொருள்: நிலாப் போன்று வெண் சங்குகளும் பறைகளும் ஒலிப்பவும் நின்ற இடத்தில் மீண்டும் நில்லாமல் கூத்தாடும் பலரும் காலில் கட்டிக் கொண்ட சதங்கை முதலியவற்றின் ஒலி பரவவும் அவற்றின் ஒலிகளை மேகத்தின் ஒலி என்று கருதித் தோகைகளை உடைய ஆண் மயில்கள் மகிழ்வோடு வந்து ஆடிச்சுழலும்படியாக ஆரூர்த் திருவாதிரைத் திருவிழாவின் அழகு ஆகும். 

11 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வசையறு மலர்மக ணிலவிய மறைவன மமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை தமிழ்விர கனதுரை யியல்வல
இசைமலி தமிழொரு பதும்வல வவருல கினிலெழில் பெறுவரே.
 
                - திருஞானசம்பந்தர் (1-22-11)

 

பொருள்: குற்றமற்ற திருமகள் நிலவும் திருமறைக் காட்டில் மறைவனத்தில் அமர்ந்துள்ள பரமனை அன்போடு நினையும் மிகுந்த கலைகளில் வல்ல புலவர்களின் புகழோடு வளரும் கழுமலநகர்த் தலைவனும் தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தனுடைய இயற்றமிழிலும் மேம்பட்ட இசை மலிந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடுபவர்கள்  உலகினில் அழகெய்துவர்.

10 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒக்க நெடுநாள் இவ்வுலகில்
உயர்ந்த சைவப் பெருந்தன்மை
தொக்க நிலைமை நெறிபோற்றித்
தொண்டு பெற்ற விறன்மிண்டர்
தக்க வகையால் தம்பெருமான்
அருளி னாலே தாள்நிழற்கீழ்
மிக்க கணநா யகராகும்
தன்மை பெற்று விளங்கினார்.
 
               - (விறன்மிண்ட நாயனார் புராணம் 10)

 

 பொருள்:  பலகாலம் இந்நிலவுலகின்கண் உயர்ந்த பெருமையும், நன்மையும், மிக்க உயரிய நெறிகள் பலவும் ஒருங்கமைந்த சைவ நெறியினைப் போற்றிப் பாதுகாத்துச் சிவ பெருமானுக்கு அடிமையாகும் தன்மையைப் பெற்ற விறன்மிண்ட நாயனார், தம் தொண்டிற்குப் பொருந்தும் முறைமையால் தமது முதல்வராகிய சிவபெருமானின் திருவருளால்,  கணநாதர் என்னும் பெருமையை  பெற்று விளங்கினார்

09 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.

                  - (11-4-65)

பொருள்: காலை நேரம் கதிரவனால்  வானம்மிகச் சிவந்து தோன்றுதல் சிவனது திருமேனிக்கும், உச்சி வேளையில் சூரியன் வெண்ணிறமாய் நிற்றலால் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் ஞாயிற்றின் கதிர்கள் பல திசைகளிலும் பல கம்பிகள் போல வீசுதலால் அவற்றின் தோற்றம் அவனது விரிந்த சடைக்கும், இரவு நேரத்தில் மிகுந்துள்ள இரவு மிகக் கரிதாய்த் தோன்றலின் அஃது அவன் கறை கண்டதையும் குறிக்கும். 

08 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.
 
            - திருமூலர் (10-1-42)

 

பொருள்: அந்தி வானம்போலும் நிறம் உடையவனே, அரனே, சிவனே என்று சிவபெருமானது திருப்பெயர்கள் பலவற்றைச் சொல்லி, தியானத்திற்கு உரிய அவனது வடிவத்தைச் செம்மை பெற்ற அடியார்கள் வணங்கும்பொழுது நானும், `எவ்வுருவிற்கும் முதலாய திருவுருவத்தை உடையவனே, தலைவனே, மேலானவனே` என்று துதித்து வணங்கினேன்; அப்பொழுதே ஞானமயனாகிய அவன் இவ்வாறு என் உள்ளத்திற் புகுந்துவிட்டான்

07 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க
எழில்கவர்ந் தான் இளங்காளை
கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க்
கனகக்குன் றெனவருங் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங்
குழகன்நல் லழகன்நம் கோவே.
 
                 - (9-7-2)

 

பொருள்: இளையகாளை போல்வானும், சோற்றுத்திரளை உண்ணும் பெரியயானைமீது மேலே குடைகவிப்ப இருபுறமும் கவரிவீசப் பொற்குன்றம் போன்று வருவானாய்த் தன்னைக் காண்பார் உள்ளத்தைக்கவரும் கள்வனும், நல்ல விளக்கம் பொருந்திய மாளிகைகளால் சூழப்பட்ட திரு இடைக்கழி என்ற திருத்தலத்தில் அழகிய குராமரத்தின் நிழலின் கீழ் எழுந்தருளியிருப்பவனும், குவளைமலர் போன்ற கண்களைஉடைய நங்கையாகிய தெய்வயானையாருக்கும் வள்ளிநாச்சியாருக்கும் கணவனும் இளையோனும், பேரழகனும் ஆகிய நம் தலைவனாம் முருகன் இந்த என் பெண்ணுடைய கச்சினை அணிந்த இளையமெல்லிய கொங்கை பசலைநிறம் மிகுமாறு செய்து அவளுடைய அழகினைக்கவர்ந்து விட்டான்.

01 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.
 
       - மாணிக்கவாசகர் (8-7-8)

 

 பொருள்: கோழி கூவ, பறவைகள் ஓசையை எழுப்பும்; வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது, நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக.