30 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி
இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
தொடர்ந்தவனைப்பணிகொண்ட விடங்கனதூர்வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
மறைஒலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.
 
          - சுந்தரர் (7-16-3)

 

பொருள்: இண்டை மலருடன்  மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து , கூட்டமான பசுக்களின் பாலைக் கொணர்ந்து சொரிய , அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி , அவரை விடாது சென்று ஆட்கொண்ட அழகனதுஊர் யாது ?` என்று வினவின் , மண்டபங்களிலும் , கோபுரங்களிலும் , மாளிகைகளிலும் , சூளிகைகளிலும் வேதங்களின் ஓசையும் , மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்புதல் பொருந்திக் கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற , தாமரைப் பொய் கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூரே ஆகும். 

27 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் றீரு மென்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா வென்பார்கட்
கணியா னாரூ ராதிரை நாளா லதுவண்ணம்.
 
           - திருநாவுக்கரசர் (4-21-2)

 

பொருள்: திருவாரூருக்கு அண்மையில் உள்ளவர், தூரத்தில் உள்ளவர், நல்லவர்கள், தீக்குணம் மிக்கவர்கள், நாடோறும் தங்கள் பிணிகள் தீரவேண்டும் என்று மிகுதியாக வந்து வழிபடுபவர்கள் ஆகிய யாவரும் மணியே பொன்னே மைந்தா மணாளா என்று வாய்விட்டு அழைப்பர,  அவர்கள் கருத்துக்கு அணியனாய் இருக்கும் ஆரூர்ப் பெருமானுடைய திரு ஆதிரை நாள் திருக்கோலம் அது. அது என்று அடியவர் மனக்கண்முன் எப்பொழுதும் நிற்பதாகும்.

26 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த வதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர் மறைவன மமர்தரு பரமனே.
 
              - திருஞானசம்பந்தர் (1-22-5)

 

பொருள்: தன்னை எதிர்த்து வந்த களிறு அஞ்சிப் பிளிற, அதனை உரித்தருளிய மிக்க குணாளனும், உயர்ந்த பசுக்களின் நாயகனாகிய விடையின்மீது வரும் ஆருயிர்களின் தலைவனும் ஆகிய பெருமான், பல கலையும் முறையாகக் கற்று உணர்ந்தவர்களும், விதிகளாகத் தாம் கற்ற நெறிகளில் நிற்போரும் ஆகிய முனிவர் குழாங்களும், மிக்கதவத்தை மேற்கொண்டொழுகும் அதி நிபுணர்களும், தன்னை வழிபடுமாறு வளங்கள் பலவும் வளரும் திருமறைக்காட்டில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.

25 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவார் பெருமை திகழ்கின்ற
தேவா சிரிய னிடைப்பொலிந்து
மருவா நின்ற சிவனடியார்
தம்மைத் தொழுது வந்தணையா
தொருவா றொதுங்கும் வன்றொண்டன்
புறகென் றுரைப்பச் சிவனருளாற்
பெருகா நின்ற பெரும்பேறு
பெற்றார் மற்றும் பெறநின்றார்.
 
             - விறன்மிண்ட நாயனார் புராணம் (7)

 

பொருள்: மங்களம் பொங்குகின்ற பெருமை மிக்க தேவா சிரியன் என்னும் காவணத்தில் சிவப்பொலிவு ததும்ப நிற்கும், சிவ பெருமானின் அடியவர்களைப் புறத்தே வணங்கிச் செல்லாது, இவ் வடியவர்க்கு அடியனாகும் நாள் எந்நாளோ? என அகத்து அன்பு செய்து, ஒருவாறாக ஒதுங்கிச் செல்லும் நம்பியாரூரர் இத்திருக் கூட்டத்திற்குப் புறம்  என்று சொல்ல, சிவபெருமான் திருவருளால் பெருகி நிற்கும் பெரிய பேற்றினைப் பெற்றுக் கொண்டவர். மேலும் சிவபெருமானையும் அவ்வாறு புறம்  என்று கூறியவர். 

24 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது

              - (11-4-61​)

 

23 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.
 
       - திருமூலர் (10-1-40)

 

பொருள்: அமரர் , அசுரர், மக்கள் ஆகிய அனைவரும் சிவ பெருமானது திருவடியை போற்றி  துதிப்பர். அதனால் நானும் அவ்வாறே செய்து அதனை என் அன்பினுள் நின்று ஒளிரச் செய்தேன்.

20 September 2013

திருகழுக்குன்றம் கீழ்க்கோயில்

திருகழுக்குன்றம் கீழ்க்கோயில் - குடமுழக்கு பிறகு



 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளுங்
குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும்என் மெல்லியல் இவளே.

            - (9-7-1)

பொருள்: சேல் மீன்கள் உலாவுகின்ற வயல்களை உடைய திருவிடைக் கழியில் திருக்குராமரத்தின் நிழலின்கீழ் நின்ற திருக்கோலத்தில் காட்சி வழங்கும் வேல் தங்கிய நீண்ட கையினை உடைய அரசனாகியவனும், பார்வதியின் புதல்வனும், வானத்தில் தங்கும் தேவர்கள் இனம் முழுதும் ஆள்பவனும், வள்ளியின் கணவனும், செந்நிறத்தவனும் ஆகிய குமரவேள் மயக்கம் தங்கும் மனத்தை எனக்கு நல்கி என்கைகளில் யான் அணிந்திருந்த சங்கு வளையல்களைத் தான் கவர்ந்து விட்டான்` என்று பெண்மையே இயல்பாக உடைய என்மகள் பேசுகிறாள் என்று தாய் கூறுகிறாள். 

19 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.
 
         -மாணிக்கவாசகர்  (8-7-7)

 

 பொருள்: தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும், பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய். தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமு தானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோம். நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ? திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது.

18 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி
இந்திரனைத் தோள்முரித்த இறையவன்ஊர் வினவில்
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்
பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக்
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர் காணே.
 
           - சுந்தரர் (7-16-2)

 

பொருள்: சலந்தராசுரனை அழித்த ஒளியையுடைய சக்கரத்தை , தன் சிவந்த கண்ணாகிய மலரையே தாமரை மலராகச் சாத்தி , வழிபாட்டிற் சிறந்து நின்றவனாகிய திருமாலுக்கு அளித்து , இருள் போலும் அந்தகாசுரன் மேல் கூர்மையான சூலத்தைப் பாய்ச்சி அழித்து , இந்திரனைத் தோள் முரித்த கடவுளது ஊர் யாது என்று வினவின் , மிக்க பேரறிவைத்தரும் வேதத்தினது ஓசையும் , முரசு ஓசையும் , சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் ஓசையும் மிக்கெழுதலினால் , கரிய எருமை நீரிற் புக , அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள் , தாமரை மலரின்மேல் நெருங்கி விழ , தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூரே ஆகும் .

17 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நாடினார்கம லம்மலரய னோடிரணிய னாகங் கீண்டவன்
நாடிக் காணமாட்டாத் தழலாய நம்பானைப்
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை கூறுபத்தர்கள் சித்தத் துள்புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன் திருவாரூ ரம்மானே.
 
             - திருநாவுக்கரசர் (4-20-10)

 

பொருள்:  திருவாரூர் அம்மானே ! தாமரை மலரில் உள்ள பிரமனோடு , இரணியன் மார்பினைப் பிளந்த திருமாலும் தேடினராயும் காண மாட்டாத தீப்பிழம்பு வடிவினனாய் , நம்மால் விரும்பப்படும் உன்னைப் பாடுபவராய்ப் பணிபவராய் வாழ்த்துபவராய் உள்ள பக்தர்களின் உள்ளத்தினுள்ளே புகுந்து தேடி அவ்விடத்தில் உன்னைக் கண்டு கொண்டேன் .

16 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி யரவது கொடுதிவி
தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ வவருடல் குலைதர வதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய மறைவன மமர்தரு பரமனே.
 
           - திருஞானசம்பந்தர் (1-22-1)

 

பொருள்: மலையை மத்தாக நடுவே நிறுத்தி, சினம் மிக்க வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக்கொண்டு, விண்ணுலகில் வாழும் தேவர்களும் அசுரர்களும் சலசல என்னும் ஒலி தோன்றுமாறு திருப்பாற்கடலைக் கடைந்தகாலத்துக் கொல்லும் தன்மை வாய்ந்த ஆலகால விடம் அக்கடலில் தோன்ற, அதனால் தேவாசுரர்கள் அஞ்சி நடுங்கித் தன்னை நோக்கி ஓலமிட்ட அளவில் அந்நஞ்சை உண்டு அவர்களைக் காத்தருளியவன் அழகிய மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட திருமறைக்காட்டில் எழுந்தருளிய பரமன் ஆவான்.

13 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நதியும் மதியும் புனைந்தசடை
நம்பர் விரும்பி நலஞ்சிறந்த
பதிக ளெங்குங் கும்பிட்டுப்
படருங் காதல் வழிச்செல்வார்
முதிரும் அன்பிற் பெருந்தொண்டர்
முறைமை நீடு திருக்கூட்டத்
தெதிர்முன் பரவும் அருள்பெற்றே
இறைவர் பாதந் தொழப்பெற்றார்.
 
               - விறன்மிண்ட நாயனார் புராணம் (5)

 

பொருள்: கங்கை நதியையும் , இளம்பிறையையும் அணிந்த சடைமுடியையுடைய சிவபெருமான் திருவுளம்கொண்டு எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் முறையாக வணங்கி, அப் பெருமானிடத்து மேன்மேலும் தழைத்துவரும் அன்பின்வழிச் செல் கின்றவர், முதிர்ந்த அன்புடைய பெருமை மிகுந்த அடியவர்கள் தாம் ஆற்றிவரும் திருத்தொண்டின் முறைமை தொடர்ந்து நீடு மாறு வழிபாடற்றிவரும் திருக்கூட்டத்தின்முன்பு சென்று வணங்கப் பெற்ற பின்னர் சிவபெருமான் திருவடிகளை வணங்கும் ஒழுக்கமுடையவர்

12 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று.

             - (11-4-60)

பொருள்: மதயானையின் தோலை உரித்து போர்த்திய எம்பெருமான் திருமேனி அழகுக்கு மேகங்கள் பொன்போலும் ஒளிவீசினாலும் ஒப்பாக.
 

10 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.
 
            - திருமூலர் (10-1-39)

 

பொருள்: சிவபெருமானது திருவடியையே துதித்து, அலறி, அழுது, அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்லவர்க்கு, அவன் தனது திருவடியை உறுதுணையாகக் கொடுத்து, பின் அதிலே அடங்கிநிற்க வல்லார்க்கு அதனை இனிது விளங்கத் தந்து, அவரது அறிவில் நிறைந்து நிற்கின்றான்.

06 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாலும் அமுதமும் தேனுமாய்
ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
புரகால காம புராந்தகன்
சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த்
திருவா வடுதுறை வேந்தனோ
டாலு மதற்கே முதலுமாம்
அறிந்தோம் அரிவைபொய் யாததே.
 
       - (9-6-11)

 

பொருள்: பாலும் அமுதும் தேனுமாக எனக்கு ஆனந்தம் தந்து என் மனத்தினுள்ளே நின்று இன்பம் கொடுத்தருளி என் அருமையான உயிரிடத்து இன்பத்தை விளைவிப்பவனாய்த் திரிபுரம், இயமனுடைய உடல், மன்மதனுடைய உடல் இவற்றை அழித்த வனாய், சேல்மீனும் கயல்மீனும் விளையாடும் காவிரிநீரை உடைய திருவாவடுதுறை மன்னனாகிய எம் பெருமானோடு விளையாடு வதற்கே என் மகள் முற்படுகிறாள்.

05 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.
 
                         - மாணிக்கவாசகர் (8-7-6)

 

பொருள்: பெண்ணே! நீ, நேற்று, நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல், நீ போன திக்கைச் சொல்வாய். இன்னும் பொழுது விடியவில்லையோ?. வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும், பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக் கின்றாய். உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய். இவ்வொழுக்கும் உனக்குத்தான் பொருந்தும். எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக!

04 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.

                             - சுந்தரர் (7-16-1)

பொருள்:  குரும்பை போன்ற  தனங்களையும், பூவை யணிந்த கூந்தலையும் உடையவளாகிய உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து, அவளை மணக்குங் குறிப்போடும் அங்குச் சென்று அவளது அன்பினை ஆய்ந்தறிந்து, அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து, அவளை மணஞ்செய்தருளிய தேவர் தலைவனும், கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது   என்று வினவின், பேரரும்புகளின் அருகே சென்று, சுரும்பு   என்னும் ஆண் வண்டுகள் இசை கூட்ட, ஏனைய பெண் வண்டுகள் பண்களைப்பாட, அழகிய மயில்கள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலையைச் சூழ்ந்த அயலிடத்தில், கரும்பின் அருகே கரிய குவளை மலர் கண்ணுறங்குகின்ற வயல்களில் தாமரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே ஆகும். 

03 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீறுசேர்செழு மார்பினாய்நிரம் பாமதியொடு நீள்ச டையிடை
ஆறுபாய வைத்தாய் அடியே யடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற கூன்றவிண்ட மலரி தழ்வழி
தேறல்பாய்ந் தொழுகுந் திருவாரூ ரம்மானே.
 
         - திருநாவுக்கரசர் (4-20-5)

 

பொருள்: வண்டுகள் தும்பிகளோடு ஏறி மலர்களில் அமர்ந்து , அழகிய சிறகுகளை அவற்றில் அழுத்தி வைப்பதனால் , மலர்களின் இதழ்கள் வழியாகத் தேன் பாய்ந்து ஒழுகும் திருவாரூர்த் தலைவனே ! நீ திருநீறணிந்த வளமான மார்பினை உடையாய் , பிறை மதியோடு உன் நீண்ட சடையிலே கங்கை பரவுமாறு அவற்றைச் சடையில் வைத்துள்ளாய் . அடியேன் உன்னை அடைந்து தீவினைகளிலிருந்து நீங்கினேன் .

02 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபது நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநல மிகுவரே.
 
            - திருஞானசம்பந்தர் (1-21-11)

 

பொருள்: புகழால் விளங்கும் சிவபுரநகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற சிரபுரநகர்த் தலைவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய உரைச்சிறப்பு வாய்ந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர் குலம், நிலம், நிறைந்த செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை வண்மை, மிக்க வெற்றித்திரு, இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி, இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப்பெறுவர்.