29 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே. 

                     -திருமூலர்  (10-3-12,11)


பொருள்: பிராணாயாம வன்மையால் தலையில் உள்ள அமுதத்தைப் பெற்று மிகவும் நுகர வல்லீராயின், உமக்கு உடம்பாய் அமைந்த, நிலம், நீர் முதலிய தத்துவங்கள் பலவும் அவை யவை ஒடுங்கும் முறையில், வலிமை கெட்டு ஒடுங்குதற்குத் தனித்தனிப் பல்லாண்டுக் காலம் செல்லும்; அங்ஙனம் செல்லவே, உடம்பு கெட் டொழியாது, நெடுநாள் நிலைத்து நிற்கும்; இஃது எங்கள் அருளாசிரி யரான நந்தி தேவர்மேல் ஆணையாக நான் சொல்லும் உண்மை.

27 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டு முடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே

               -சுந்தரர்  (7-81-3)


பொருள்: உலகீர் , நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து , முழுதும் ஒழிதற்பொருட்டு , தோள்கள் எட்டினையும் உடைய , சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை யுடையவனாகிய , நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற , குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை , நாள்தோறும் , முறைப்படி , நெடிது நின்று வழிபடுமின்கள்

20 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனன்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு வேதிகுடி
அத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.

                   -திருநாவுக்கரசர்  (4-90-2)


பொருள்: கைகளில் மான்குட்டியையும் கொடிய மழுப் படையையும் ஏந்தி , மண்டையோட்டைத் தாங்கித் திருநீற்றை அணிந்து பொய்த் தலை கொண்டு பிச்சைக்காகத் திரிபவனும் , வயல்களிலே வாளை மீன்கள் தாவித் துள்ளும் திருவேதிகுடிப் பெருமானும் ஆகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் நாம் .

16 November 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

                     -திருஞானசம்பந்தர்  (1-88-2)


பொருள்: குராமலர் மணம் கமழும் கூந்தலையுடைய உமை யம்மை விளங்கும் திருமேனியோடு தேவர்கள் கூடி வணங்கத் திருஆப்பனூரில் விளங்கும் சிவபிரானைப் பரவும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

15 November 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நீடுதிருத் தூங்கானை
மாடத்து நிலவுகின்ற
ஆடகமே ருச்சிலையான்
அருளாலோர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே
வாகீசர் திருத்தோளில்
சேடுயர்மூ விலைச்சூலம்
சினவிடையி னுடன்சாத்த.

           -திருநாவுக்கரசர் புராணம்  (152)


பொருள்: செல்வம் நிலைபெறும் திருத்தூங்கானை மாடத்தில் நிலவும் பொன்னான மேருமலையை வில்லாக உடைய பெருமானின் திருவருளால், ஒரு சிவ பூதமானது, அருகிலுள்ளார் யாரும் அறியாதவாறு வந்து, திருநாவுக்கரசரின் திருத்தோள்களில் ஒளி மிக்க மூவிலைச்சூலக் குறியைச் சினமுடைய ஆனேற்றின் குறியுடனே சாத்த,

13 November 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே. 

                   -திருமூலர்  (10-3-11,14)


பொருள்: சிறப்பால் தம்முள் ஒத்தனவாகிய, தனஞ்சயன் ஒழிந்த ஏனை வாயுக்கள் ஒன்பதும் வேறு வேறு நின்று செயற்படுவன. சிறப்பால் அவ்வொன்பதிலும் மேம்பட்டது `தனஞ்சயன்` என்னும் வாயு. அஃது ஏனை ஒன்பது வாயுக்களினும் ஒப்பக் கலந்து, அவற் றிற்கு வன்மையைத் தந்து நிற்கும். அஃது அவ்வாறு நிற்பதனாலே உயிரும், உடம்பும் இணங்கியிருக்கின்றன

12 November 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


சுடுவார்பொடி நீறுந்நல
துண்டப்பிறை கீளும்
கடமார்களி யானையுரி
யணிந்தகறைக் கண்டன்
படவேரிடை மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
திடமாஉறை கின்றான்திருக்
கேதீச்சரத் தானே

         - (சுந்தரர் 7-80-2)


பொருள்: சுடப்பட்ட நுண்ணிய பொடியாகிய நீற்றையும் , நல்ல பிளவாகிய பிறையையும் , கீளினையும் , மதம் நிறைந்த மயக்கத்தையுடைய , யானையினது தோலையும் அணிந்த கறுத்த கண்டத்தை உடையவனாகிய , திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் , பாலாவி யாற்றின் கரைமேல் , பாம்பு போலும் இடை யினையுடைய மங்கை ஒருத்தியோடு நிலையாக வாழ்பவனாய்க் காணப்படுகின்றான் .